திண்டிவனத்தில் தியேட்டர் உரிமையாளர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை

திண்டிவனத்தில் தியேட்டர் உரிமையாளர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். இது தொடர்பான காண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-04-24 16:58 GMT
திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் செஞ்சி ரோட்டை சேர்ந்தவர் பாலாஜி (வயது 57). தியேட்டர் உரிமையாளர். இவர் தனது வீட்டில் கீழ்தளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலம் தளத்தில் யாரும் வசிக்கவில்லை.  

 இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேல் தளத்திற்கு பாலாஜி சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க ஜன்னல் கதவு  உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டில் இருந்த பொருட்களை பார்த்த போது கொள்ளை போகவில்லை.

அதோடு, தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கா ட்சிகளை பார்த்தார். அதில், 18-ந்தேதி நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல், அவரது வீட்டு ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்து இருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகலறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார், பாலாஜியின் வீட்டுக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அதில், கடந்த 18-ந்தேதி நள்ளிரவு திண்டிவனம் உள்ளிட்ட அடுத்தடுத்து 5 இடங்களில் துப்பாக்கி, ஆயுதங்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர்கள், பாலாஜியின் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்