விழுப்புரம், விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி

விழுப்புரம், விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணும் பணியின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-04-24 16:50 GMT
விழுப்புரம், 


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி எண்ணப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள வாக்கு எண்ணிக்கை மைய மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களுக்கு, வாக்கு எண்ணும் பணியின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

அறிவுரை

கூட்டத்திற்கு விழுப்புரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ஹரிதாஸ் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடசுப்பிரமணியன், கோவர்த்தனன், செந்தில், ரங்கநாதன், ராணி, செந்தில்வடிவு, தேர்தல் துணை தாசில்தார் வெங்கட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேர்தல் அதிகாரி ஹரிதாஸ் பேசுகையில், விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகள் போடப்பட்டு 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது. தபால் வாக்குகள் 3 மேஜைகளில் எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் வாக்கு எண்ணும் நாளன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராக வேண்டும். 

ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் வரிசை எண்கள் சுற்று வாரியாக அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும், வாக்கு எண்ணும் அலுவலர்கள், காலை 7.45 மணியளவில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


பயிற்சி

மேலும் வாக்குகள் பதிவாகியுள்ள எந்திரத்தை திறந்து எண்ணும் முறைகள், ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்குகளை அறிவிக்கும் முறைகள் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டு உரிய பயிற்சி அளிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி

இதேபோல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு சட்ட மன்ற தொகுதி தேர்தல் அலுவலர் அறிவுடை நம்பி தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, கணேசன், கீதா, வேல்முருகன், மனோகரன், பாஸ்கரதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் தனி தாசில்தார் வேலு வரவேற்றார்.

 தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும்  தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கை குறித்த பயிற்சி வழங்கி, நடைமுறை செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள் வழங்கினர். 

இதில் மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி, வருவாய் உதவியாளர் குமரன், தொகுதி ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள், மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்