இரவு நேர பஸ்கள் ரத்து ரெயிலில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

Update: 2021-04-24 16:40 GMT
நீடாமங்கலம்:-

இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. 

கொரோனா பரவல் 

கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. பொதுமக்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
மீண்டும் அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தியதைபோல ஊரடங்கை அமல்படுத்துமோ? என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டிருந்தது.

பயணிகள் வருவது குறைந்தது

இதன் காரணமாக ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடிக்கு அதிகாலை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாள் தோறும் 100 பயணிகள் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் இறங்கி நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்வது வழக்கம். 
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் வருவது குறைந்தது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தால் மீண்டும் சென்னை செல்ல முடியாதோ? என்ற அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளதே ரெயிலில் பயணிகள் கூட்டம் குறைவதற்கு காரணம் என கூறப்பட்டது. 

பஸ்கள் ரத்து

இந்த நிலையில் சமீபத்தில் தமிழகஅரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் காரணமாக இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில் தென்னக ரெயில்வே ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவித்தது. 
இந்த அறிவிப்பு வெகு தொலைவில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளுக்கு உதவியாக அமைந்துள்ளது. இரவுநேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அைலமோதுகிறது.  குறிப்பாக சென்னையில் இருந்து அதிகாலை நீடாமங்கலம் வந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் வருகை கடந்த 2 நாளாக மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் செய்திகள்