இன்று முழுஊரடங்கு: டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது

இன்று முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதை யொட்டி டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.;

Update: 2021-04-24 16:35 GMT
பொள்ளாச்சி,

கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதையொட்டி மதுக் கடையில் மதுபாட்டில்கள் வாங்குவதற்கு மதுபிரியர்கள் திரண்டனர். சிலர் மொத்தமாக பாட்டில்களை வாங்கி சென்றனர். பார் வசதி இல்லாத கடைகளின் முன் அங்கேயே நின்று குடித்தனர். கோட்டூர் ரோடு, ஏ.டி.எஸ்.சி. தியேட்டர் ரோட்டில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதியது.

 இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமூக இடைவெளி இல்லாமலும், முகககவசம அணியாமல் கூட்டம், கூட்டமாக வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

ஊரடங்கையொட்டி இன்று அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன. இதன் காரணமாக இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோன்று மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் வணிக நிறுவனங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

சில வணிக நிறுவனங்களில் மட்டுமே கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. இந்த நிலையில் முழுஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் வர வேண்டும். 

திருமணத்திற்கு செல்வோர் பத்திரிகை வைத்திருக்க வேண்டும். ஊரடங்கையொட்டி கூடுதலாக தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்படும். தேவையில்லாமல் சுற்றி திரிவோர் மீது வழக்குபதிவு செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி வால்பாறையில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், வணிக வளாகங்களில் பொருட்கள் பொதுமக்கள் குவிந்தனர். வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

 அவர்கள் முண்டியடித்து காய்கறிகளை வாங்கி சென்றனர். காய்கறி வாங்க வந்தவர்களில் பலரும் முகக்கவசம் அணிந்து இருந்தாலும், அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்