திண்டுக்கல்லில் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, திண்டுக்கல்லில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-04-24 15:49 GMT
திண்டுக்கல்:
முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, திண்டுக்கல்லில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தங்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள், இறைச்சி, மீன் ஆகியவற்றை பொதுமக்கள் நேற்றே வாங்கி குளிர்பதன பெட்டியில் இருப்பு வைக்க தொடங்கினர்.
மக்கள் கூட்டம்
இதன் காரணமாக திண்டுக்கல் பெரியகடைவீதி, மேற்குரதவீதி உள்ளிட்ட மக்கள் குவிந்தனர். அவர்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கிச்சென்றனர். வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்ததால் மளிகை கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் பொருட்களை வாங்கிச்செல்லும் நிலை ஏற்பட்டது.
இதேபோல் காந்தி மார்க்கெட்டிலும் காய்கறிகளை வாங்குவதற்காக ஏராளமானோர் திரண்டனர். மேலும் மார்க்கெட்டிலும் நேற்று வழக்கத்தைவிட இருமடங்கு காய்கறிகள் வரத்தாகியிருந்தது. 
அதேநேரத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகமாக இருந்தது. ஆனாலும் பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு காய்கறிகளை வாங்கிச்சென்றனர். கூட்ட நெரிசல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
முக கவசம் அணியவில்லை
கடைவீதிகள், மார்க்கெட்டில் திரண்ட பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. மாவட்டத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பொதுமக்கள் வெளியில் சுற்றித்திரிவதால் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்