போலீஸ் சோதனை சாவடியை உடனடியாக அகற்ற ேவண்டும்
வாணியம்பாடி அருகே கடத்தலை தடுப்பதற்காக போலீசார் அமைத்த சோதனை சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியதால் பரபரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே கடத்தலை தடுப்பதற்காக போலீசார் அமைத்த சோதனை சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியதால் பரபரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடத்தல்
தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள வாணியம்பாடி அடுத்த தும்பேரி- அண்ணாநகர் பகுதி ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இந்த வழியாக தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி, செம்மரக்கட்டைகள் ஆகியவை தடையின்றி கடத்தப்பட்டு வந்தது.
இதனை தடுக்க அப்போது வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த செந்தில் குமாரி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி சோதனை சாவடி ஒன்றை திறந்து வைத்தார். அன்று முதல் சுழற்சிமுறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுப்பாதை வழியாக கடத்தல்
சோதனை சாவடி அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தும்பேரியில் இருந்து மாற்று வழி பாதை ஒன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது, இதனை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் எளிதில் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட இதர பொருட்களையும் எளிதில் கடத்து வந்தனர்.
அதேபோல் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சும் சாராயத்தையும் வாணியம்பாடிக்கு கடத்தி வருவது வாடிக்கையாக இருந்தது.
இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டம் உதயமானது பின்பு மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற விஜயகுமார் இந்த சோதனை சாவடி பகுதியை ஆய்வு செய்து சோதனைச் சாவடியை அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அண்ணா நகர் மலையடிவார பகுதியில் கொண்டுபோய் அமைக்க உத்தரவிட்டார்.
தண்டிக்கப்படுவீர்கள்
இதனை அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் வனத்துறை சோதனைச் சாவடி என்று ஒன்றை அமைத்து விட்டு அந்த பகுதியில் ஒரு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
அதில் இந்த வனப்பகுதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் வனப்பகுதியில் யாரும் பயணிக்கக் கூடாது. இது தடை செய்யப்பட்ட பகுதி எனவும் மீறினால் வனத்துறை சட்டத்தில் தண்டிக்கப்படுவீர்கள் என அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துவிட்டனர்.
தொடர்ந்து இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனைச் சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இரண்டு முறை நோட்டீசும், ஒரு முறை நினைவு கடிதம் அனுப்பி விட்ட வனத்துறையினர் தற்போது நேற்று அங்கு போலீஸ் சோதனைச் சாவடியில் ஒரு நோட்டீசை ஒட்டியுள்ளனர் அந்த நோட்டீசில், ’’திருப்பத்தூர் வனச்சரகத்தில் உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச் சாவடியை வருகிற ஏப்ரல் 30-ந்் தேதிக்குள் அகற்ற வேண்டும்’’ என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் எம்.பிரபு என்பவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வெளியேற்றப்படுவார்கள்
வாணியம்பாடி தாலுகா தும்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் அம்பலூர் காவல் நிலையத்தின் சோதனை சாவடி அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியை காலி செய்யுமாறு பலமுறை கடிதங்கள் மற்றும் நினைவூட்டல் கடிதம் மூலம் அறிவுறுத்தியும் இதுநாள்வரையில் வெளியேறாமல் இருந்து வருகின்றனர்.
எனவே தாமாக முன்வந்து ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வன நில ஆக்கிரமிப்பை விட்டு வெளியேற வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு வன சட்டத்தின்படி வனத்துறையினரால் வெளியேற்றப்படுவார்கள். அதில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசார் அமைத்த சோதனை சாவடியை காலி செய்ய வனத்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.