கோவில் உண்டியல் உடைப்பு; 3 பேர் கைது
கயத்தாறில் கோவில் உண்டியலை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு, ஏப்:
கயத்தாறு முத்தாரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன், நாகம்மன் கோவிலுக்குள் நள்ளிரவில் மர்மநபர்கள் புகுந்து உண்டியலை உடைப்பதாக கயத்தாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, அங்கிருந்தவர்கள் தப்பித்து வேறு ஒரு கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைக்க முயற்சித்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், நெல்லை மாவட்டம் சங்கர்நகர் அருகே உள்ள தாதனூத்து கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் பால்துரை (வயது 33), பிரான்சிஸ் மகன் முத்துராஜ் (30), கங்கைகொண்டான் துறையூர் காலனியை சேர்ந்த முருகன் (45) ஆகியோர் என்பதும், 2 மோட்டார் சைக்கிளில் வந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாயையும், 2 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தார்.