ஒரேநாளில் 367 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 367 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 367 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் மக்களிடையே பரவல் அதிகமாக உள்ளது.
மாவட்டத்தில் 24 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு உள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வி.ஐ.டி.யில் சிறப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுகிறது.
அதன்படி இன்று வெளியான முடிவில் ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 367 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகர பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் காந்திரோடு, மெயின் பஜார், காகிதப்பட்டறை பகுதியில் உள்ள 20 தங்கும் விடுதிகளில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2 பேர் பலி
குடியாத்தம், அணைக்கட்டு, பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு, கோரந்தாங்கல், லத்தேரி, திப்பசமுத்திரம் பகுதிகளிலும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிக்கப்பட்ட 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல மூச்சு திணறல் காரணமாக ஒரு நோயாளி உயிரிழந்தார்.
தடுப்பூசி
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வேலூர், காட்பாடி உட்கோட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு 2-ம் கட்ட தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. அதில் பெண் போலீசார் உள்பட பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத் துறைஅதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.