மீஞ்சூர் அருகே ஆந்திராவுக்கு படகில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி; 6 பேர் கைது
மீஞ்சூர் அடுத்த காட்டூர் கிராமத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து ஆந்திராவிற்கு படகு மூலம் கடத்த முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள 250 ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்பட பல்வேறு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷனில் விலை இல்லாமல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 20 கிலோ வீதம் தமிழக அரசின் பொது வினிியோகத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கு துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை பழவேற்காடு காட்டூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆந்திராவிற்கு படகு மூலம் கடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை உணவு பொருள் வழங்கல் துறையினருக்கு புகார்கள் வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாட்டு வண்டியை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி சோதனை செய்த போது, 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது கடத்தலில் ஆந்திரா மாநிலம் பூண்டிகுப்பம் கிராமத்தைச் சார்ந்த மூர்த்தி (வயது 46), சுதா (34), நெல்லூர் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமநாதன் (38), காட்டூர் காலனியை சேர்ந்த கோவிந்தராஜன் (32), சுரேஷ் (45), மணி (22) ஆகியோர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்து படகு மூலம் ஆந்திராவிற்கு 1 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அவர்களிடம் 1 டன் ரேஷன் அரிசி கைது செய்யப்பட்ட 6 பேரையும் காட்டூர் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.