புதுவை மக்களுக்கு முன்னுரிமை தர மறுக்கும் ஜிப்மர் மருத்துவமனை ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி

புதுவை மாநில எல்லையான கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. தென் இந்தியாவில் உள்ள சிறப்பு வாய்ந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று.

Update: 2021-04-24 06:36 GMT
புதுவை, 

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மருத்துவமனையில் நவீன உபகரணங்களுடன் உயரிய சிகிச்சை அளிப்பது தான் இதன் சிறப்பு. இதனால் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.

இதுபோல் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

மத்திய அரசின் நிறுவனம் என்றாலும் புதுச்சேரியில் அமைந்து இருப்பதால் சிகிச்சை அளிப்பதில் இங்குள்ள மக்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பது விதி.

ஆனால் இதை ஜிப்மர் மருத்துவமனை கண்டுகொள்வது இல்லை. சிகிச்சைக்காக செல்வோரை அனுமதிக்காமல் முடிந்தவரை புறக்கணித்து வெளியே அனுப்பி விடுகிறார்கள். இதையும் மீறி சிகிச்சையில் சேர்ந்தால் ஒரு சில மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக கூறி வெளியே வாங்கி வரும்படி கூறுவதாக நோயாளிகளை நிர்ப்பந்திக்கின்றனர்.

தற்போது கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பிரிவு மூடப்படுகிறது. ஏற்கனவே செயல்பட்டு வரும் தொலைபேசி வாயிலாக கலந்தாலோசனை வழங்குவது அதிகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் ஒரு சிக்கல்.

நோயாளிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் பதில் கூறுவது வடமாநில டாக்டர்கள் தான். அவர்களில் பலருக்கு தமிழ்மொழி தெரியாது. இதனால் நோயாளியால் தனக்கான பாதிப்புகளை முழுமையாக கூறினாலும் அதனை புரிந்து கொண்டு டாக்டர்களால் ஆலோசனைகள் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது.

புதுவையில் தற்போது கொரோனாவின் 2-வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தின நிலவரப்படி ஆஸ்பத்திரியில் 1,297 பேரும், வீடுகளில் 5,033 பேரும் என மொத்தம் 6,330 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஜிப்மரில் தற்போது கொரோனா மற்றும் முக்கியமான சிகிச்சைகள் தான் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறியுடன் புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக சென்றால் அவர்களுக்கு ஜிப்மரில் அனுமதி வழங்குவது இல்லை.

ஜிப்மரில் பணியில் இருப்பவர்கள், எம்.பி.க்கள், மத்திய அரசின் முக்கிய பணியில் உள்ள அதிகாரிகள் என சிபாரிசின் அடிப்படையில் வருவோர் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஜிப்மரில் சாதாரண ஏழை, எளிய மக்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து மருத்துவம் பார்ப்பது என்பது முடியாத காரியமாக உள்ளது. முன்பதிவு செய்யாமல் யாராவது வந்தால் அனுமதிப்பது இல்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

கொரோனா சிகிச்சைக்கு 300 படுக்கைகள் ஒதுக்கி தர வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகத்திற்கு புதுவை அரசு கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில் படுக்கைகளும் ஒதுக்கப்பட்டன.

ஆனால் நேற்றைய நிலவரப்படி 243 கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ள படுக்கைகள் காலியாக தான் இருப்பதாக தெரிகிறது.

மற்ற மருத்துவமனைகளில் கொரோனா பிரிவுகள் நிரம்பி வழியும் நிலையில் ஜிப்மரில் மட்டும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நோயாளிகளை அனுமதிக்காத நிலை இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி புகைப்பட கலைஞர் தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமானதால் அவரது மேல் சிகிச்சைக்காக அணுகிய போது ஜிப்மர் அனுமதிக்க மறுத்து விட்டது. இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்களது மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் தமக்கு பலவீனமாகி விடும் என்பதற்காகவே இதுபோல் தொற்று பாதித்தவர்களை அனுமதிக்க ஜிப்மர் மறுப்பதாக விசாரணையில் தெரியவந்தது.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு உயிர்காக்கும் மருந்தாக கருதப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு ஜிப்மரில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ரெம்டெசிவிர் மருந்தை வெளியே வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினர்களிடம் எழுதி கொடுப்பதும் நடந்துள்ளது. இந்த மருந்தை வாங்க வசதி இல்லாமல் நோயாளிகள் பலர் அவதிக்குள்ளாகின்றனர். இதை அறிந்து கவர்னர் தற்போது ரெம்டெசிவிர் மருந்து வாங்கி தர முன்வந்து அதற்காக உத்தரவிட்டுள்ளார்.

புதுவையில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனை ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி உள்ளூர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்னுரிமை தர வேண்டும். மற்ற மருத்துவமனைகளில் பின்பற்றப்படுவதுபோல் அரசு சுகாதாரத்துறை மூலம் பரிந்துரைத்து அனுப்பி வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க ஜிப்மர் நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே மாநில மக்களின் கோரிக்கை ஆகும்.

மேலும் செய்திகள்