பூந்தமல்லி அருகே கடை முன்பு படுத்திருந்த வாலிபர் உடல் கருகி சாவு உயிருடன் எரித்து கொலையா? போலீஸ் விசாரணை

பூந்தமல்லி அருகே கடை முன்பு படுத்திருந்த வாலிபர் திடீரென உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உடல் கருகி பலியானார். அவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-04-24 05:01 GMT
பூந்தமல்லி, 

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி டிரங்க் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் படுத்து தூங்கினார். நள்ளிரவில் அவரது உடலில் திடீரென தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

எனினும் அவர் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், தீயில் கருகி இறந்தவர், பூந்தமல்லியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பது தெரிந்தது. அவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறினார். அன்று முதல் இந்த பகுதியில் சாலையோரம் தங்கி, இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதை பழைய இரும்பு கடைகளில் போட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைத்து வந்தார்.

தினமும் இரவு நேரத்தில் இந்த கடையின் முன்பு படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் படுத்தவர், தீயில் உடல் கருகி பலியானது தெரிந்தது.

அவர் குடிபோதையில் சிகரெட் புகைத்துவிட்டு நெருப்பை அணைக்காமல் போட்டதால் உடலில் தீப்பிடித்து எரிந்து பலியானாரா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தூங்கி கொண்டிருந்த மணிகண்டனை உயிருடன் தீ வைத்து எரித்து கொன்றார்களா? என்ற கோணத்தில் பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்