முழு ஊரடங்கு: ஒரு மணிநேர இடைவெளியில் நாளை மெட்ரோ ரெயில் சேவை
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 20-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செயப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கின் போது மெட்ரோ ரெயில் சேவை ஒரு மணிநேர இடைவெளியில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 20-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. முழு ஊரடங்கான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். அதனபடி, விம்கோ நகர்-விமான நிலையம் இடையே ஒரு மணி நேர இடைவெளியிலும், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-விமான நிலையம் (கோயம்பேடு வழியாக) 2 மணி நேர இடைவெளியிலும், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-பரங்கிமலை இடையே 2 மணி நேர இடைவெளியிலும் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.