ரூ.10 லட்சத்துக்கு சிறுமியை விற்பனை செய்த விவகாரம்: சேலத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் விசாரணை
சேலம்:
சேலத்தில் ரூ.10 லட்சத்துக்கு சிறுமியை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.
சிறுமி விற்பனை
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஒருவருக்கு ரூ.10 லட்சத்துக்கு அவளது தாய் விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் பாட்டி சின்னபொண்ணு சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுமியின் பெற்றோர் சதீஷ், சுமதி மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கியதாக தொழில் அதிபர் கிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை அமர்வு அமைத்து உத்தரவிட்டார். அந்த விசாரணை அமர்வில் ஆணையத்தின் உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
உறுப்பினர்கள் விசாரணை
இந்தநிலையில், ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மேலும், மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார், துணை கமிஷனர் சந்திரசேகரன், சிறுமி விற்பனை செய்யப்பட்ட வழக்கு விசாரணை அதிகாரியும், கூடுதல் துணை கமிஷனருமான கும்மராஜா, சைல்டு லைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களிடம் சிறுமி விற்பனை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஆணையத்தின் உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.
பேட்டி
தொடர்ந்து தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ராமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலத்தில் சிறுமி விற்கப்பட்டதாக புகார் எழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமம் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இதில், பல்வேறு உண்மைகள் தெரிய வந்திருக்கிறது. இந்த விசாரணையில் நிறைகள், குறைகள் கேட்டறிந்து இருக்கிறோம். தவறுகள் குறித்து ஆலோசனை நடத்தி ஆணையத்திற்கு அறிக்கை தர உள்ளோம். வரும் காலத்தில் குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கை பொறுத்தவரையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் மற்றும் இளைஞர் நீதி குழுமம், சைல்டு லைன் அமைப்பு உள்ளிட்ட 3 அமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும். இந்த அமைப்புகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதோடு திறம்பட அமைப்புகள் செயல்பட தனியாக சட்டம் இயற்ற வேண்டும்.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு ஆணையம் சார்பில் பரிந்துரை செய்யப்படும். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் நாடாளுமன்றத்தில் சட்டமாக கொண்டு வந்து இந்த குழுக்களுக்கு அதிகாரம் அளித்து குழந்தைகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். சேலத்தில் சிறுமி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றத்தை தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் அது குற்றம் தான். அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.