தென்காசியில் 50 சதவீத அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் கிடைக்கவில்லை - கலெக்டரிடம் தி.மு.க. புகார்
தென்காசியில் 50 சதவீத அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் கிடைக்கவில்லை என்று கலெக்டரிடம் தி.மு.க. புகார் மனு கொடுத்தது.;
தென்காசி:
தென்காசி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர். அதில் கூறி இருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தபால் வாக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை 50 சதவீத வாக்குகள்தான் அனுப்பப்பட்டுள்ளது என்றும், பல அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வரவில்லை என்றும் புகார் கூறுகிறார்கள். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டால் உரிய பதில் கிடைக்கவில்லை. உதாரணமாக சங்கரன்கோவில் தொகுதியில் மொத்த தபால் வாக்குகள் 3,927 ஆகும். கடந்த 20-ந் தேதி வரை பெறப்பட்ட தபால் வாக்குகள் 1,921 ஆகும். சில அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் கிடைக்கவில்லை என்ற புகார் வருகிறது. அந்த அடிப்படையில் அதிகாரிகளை கேட்கும்போது முகவரி சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அஞ்சலக ஊழியர்கள் அதனை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் என்று கூறினார்கள். எனவே தபால் வாக்குகள் அனுப்பப்படாமல் இருந்தால் உடனடியாக அனுப்ப அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறும், முறையான முகவரிக்கு தபால் வாக்குகள் கிடைக்க சம்பந்தப்பட்ட தபால் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது தி.மு.க. நகர செயலாளர் சாதிர் உள்பட பலர் உடன் இருந்தனர்.