நாளை மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள், மார்க்கெட்டுகள் செயல்படாது

முழு ஊரடங்கையொட்டி நாளை பெரம்பலூர் மாவட்டத்தில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள், மார்க்கெட்டுகள் செயல்படாது. இன்று இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை பஸ்கள் ஓடாது.

Update: 2021-04-23 21:29 GMT
பெரம்பலூர்:

நாளை முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில் இரவு நேர ஊரடங்கை கடந்த 20-ந்தேதி முதல் தமிழக அரசு அமல்படுத்தியது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இரவு நேர ஊரடங்கு தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு தமிழகத்தில் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை டீக்கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது.
ஓட்டல்களில் பார்சல்...
பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம் மற்றும் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கான வாகனங்கள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின்போது இயங்கலாம்.
நாளை ஓட்டல்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்மா உணவகம் இயங்கும்
மேலும் அதிகாரிகள் கூறுகையில், நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று (சனிக்கிழமை) இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். விற்பனையாளர்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பொதுமக்களும் முக கவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகே நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்றால், அங்கு காய்கறிகளை வாங்கி கொள்ளலாம். முழு ஊரடங்கு அன்றும் வழக்கம்போல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அம்மா உணவகங்கள் இயங்கும்.
பஸ்கள் ஓடாது
இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை அரசு-தனியார் பஸ்கள் ஓடாது. எனவே வெளியூர் செல்பவர்கள், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இன்று மாலைக்குள் வந்து விட வேண்டும். மேலும் முழு ஊரடங்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் அமலுக்கு வந்துவிடுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். முழு ஊரடங்கில் அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும், என்றனர்.

மேலும் செய்திகள்