மனைவியை அடித்து துன்புறுத்திய கணவன் கைது
மனைவியை அடித்து துன்புறுத்திய கணவனை போலீசார் கைது செய்தார்கள்.
கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரியை சேர்ந்தவர் ரகுநாத் (வயது 30). மெக்கானிக். இவருடைய மனைவி நந்தினி (28). இவர்களுக்கு ஹன்சிகா (8), அயிரா என்ற 9 மாத கைக்குழந்தையும் உள்ளது. ரகுநாத்தும், நந்தினியும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உன்னுடன் வாழ பிடிக்கவில்லை. வேறு திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என மனைவி நந்தினியிடம் ரகுநாத் கூறியதாக தெரிகிறது. மேலும் நந்தினியை தகாத வார்த்தையால் திட்டியும், அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராகுநாத்தை கைது செய்தனர்.