ஊஞ்சலூர் அருகே தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலைசெய்த கணவன்- மனைவி உள்பட 13 பேர் மீட்பு

ஊஞ்சலூர் அருகே தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்த கணவன், மனைவி உள்பட 13 பேரை போலீசார் மீட்டனர்.

Update: 2021-04-23 21:04 GMT
ஊஞ்சலூர் அருகே தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்த கணவன், மனைவி உள்பட 13 பேரை போலீசார் மீட்டனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொத்தடிமைகளாக...
ஊஞ்சலூரை அடுத்த பாசூர் அருகே உள்ள தோட்டம் ஒன்றில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக விழுப்புரம் மாவட்ட கொத்தடிமைகள் தடுப்பு கண்காணிப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட கொத்தடிமைகள் தடுப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் ஊஞ்சலூரை அடுத்த பாசூருக்கு வந்து விசாரணை நடத்தினார். 
விசாரணையில், ‘அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சரத்குமார் (வயது 23), அவருடைய மனைவி கனவுக்கன்னி (21) மற்றும் அவர்களுடைய உறவினர்களான சக்திவேல், வேதவல்லி உள்பட ெமாத்தம் 13 பேர் அங்குள்ள தோட்டத்தில் கொத்தடிமைகளாக கூலி வேலை செய்து வந்தது,’ தெரிய வந்தது. 
ரூ.27 ஆயிரம் கடன்
அவர் மேலும் நடத்திய விசாரணையில், ‘கனவுக்கன்னியின் தந்தை பண்ருட்டியை சேர்ந்த மகாதேவனிடம் ரூ.27 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்காக சரத்குமார், கனவுக்கன்னி மற்றும் அவர்கள் உறவினர்கள் உள்பட 13 பேரை கூலி வேலை செய்வதற்காக தன் நண்பர்களான ராமகிருஷ்ணா, வேளாங்கண்ணி ஆகியோரிடம் மகாதேவன் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து 13 பேரை கடந்த 1 ஆண்டாக பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று கூலி வேலை செய்ய வைத்து உள்ளனர். அவ்வாறு வேலை செய்தவர்களுக்கு தங்குவதற்கு உரிய இடம், சரியான உணவு ஆகியவற்றை வழங்காததுடன், அளவுக்கு அதிகமாக வேலை வாங்கியதாகவும் தெரிகிறது. மேலும் 13 பேரையும் குடும்பத்தில் நடைபெறும் திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு அனுப்பாமல் அடிமைப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஊஞ்சலூர் அருகே உள்ள பாசூர் பகுதிக்கு வந்து அங்குள்ள ஒரு தோட்டத்தில் தங்க வைத்து வேலை வாங்கியதையும்,’ கண்டுபிடித்தார். 
மீட்பு
இதைத்தொடர்ந்து அவர்கள் 13 பேரையும் விழுப்புரம் மாவட்ட கொத்தடிமைகள் தடுப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் முத்துக்கண்ணன், மீட்டு மலையம்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். 
பின்னர் இதுகுறித்து கனவுக்கன்னி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டியை சேர்ந்த மகாதேவன், ராமகிருஷ்ணா, வேளாங்கண்ணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 
மீட்கப்பட்ட 13 பேரையும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். 

மேலும் செய்திகள்