நானும் ரவுடிதான் என கூறி தகாத வார்த்தை பேசிய இளம்பெண் கைது
முக கவசம் அணியாததால் அபராதம் செலுத்தக்கூறிய போலீசாரிடம் நானும் ரவுடிதான் என கூறி தகாத வார்த்தை பேசிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்;
முக கவசம் அணியாததால் அபராதம் செலுத்தக்கூறிய போலீசாரிடம் நானும் ரவுடிதான் என கூறி தகாத வார்த்தை பேசிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
முக கவசம் அணியாத பெண்
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் வீட்டைவிட்டு வெளியே வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் தஞ்சை மாநகரில் பலர் முக கவசம் அணியாமல் வருவதால் அவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் அபராதம் விதித்து வருகின்றனர்.
தஞ்சை புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் மருத்துவக்கல்லூரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர், முக கவசம் அணியாமல் வந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, முக கவசம் அணியாததால் அபராதம் ரூ.200 செலுத்துமாறு கூறினர்.
நானும் ரவடிதான்
அப்போது அந்த பெண், போலீசாரை பார்த்து, எல்லோரும் உழைக்கிறவங்கதான். இத்துனூண்டு மாஸ்கிற்கு (முக கவசம்) ரூ.200 கட்ட சொல்றீங்களே, அசிங்கமா இல்லையா? என கேட்டார். உடனே போலீசார், கலெக்டரை போய் கேளும்மா என கூற அந்த பெண், கலெக்டரை கூட்டிட்டு வா என தகாத வார்த்தையில் பேசினார்.
இதை எல்லாம் வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்த போலீஸ்காரரை பார்த்து அந்த பெண், வீடியோ எடுக்கிறியா எடுத்துக்கோ. பேஸ்புக்கில் போடுறியா போடு. ஷேர் செய்வோமா? எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் நான் மாஸ்க்கை உள்ளே வைத்து இருக்கிறேன். என்னை உள்ளே போட போறியா போடு நானும் ரவுடி தான். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என கூறிவிட்டு அங்கிருந்து அந்த பெண் தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
கைது
இந்த சம்பவம் தஞ்சை முழுவதும் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பெண் தஞ்சை மானோஜிப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நந்தினி(வயது26) என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து பொது இடங்களில் ஆபாசமாக பேசியது மற்றும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் நந்தினி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.