ஈரோடு மாநகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
ஈரோட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பால் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பால் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கிருமி நாசினி தெளிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு தெருவாக சென்று அங்குள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
பிளீச்சிங் பவுடர்
இந்த நிலையில் நேற்று ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதற்கிடையில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள தெருக்களில் போடுவதற்காக பிளீச்சிங் பவுடர் நேற்று ஒரு லாரியில் கொண்டு வரப்பட்டது. லாரியில் இருந்த பிளீச்சிங் பவுடர் மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி ஈரோடு தமயந்தி பாபு சேட் மண்டபத்தில் அடுக்கி வைத்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.