காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டே தற்கொலை செய்த மாணவி

ஆரல்வாய்மொழியில் காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டே மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-23 20:03 GMT
ஆரல்வாய்மொழி, 
ஆரல்வாய்மொழியில் காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டே மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நர்சிங் மாணவி
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பண்ணையார்விளை தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி ஜெஸ்டின். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மரிய சுசிலா.
இவர்களுக்கு பிராட்வின் நிபியா (21) என்ற மகளும், எக்சன் ஜெதீஸ் தேவ் என்ற மகனும் இருந்தனர்.
காதல் பிரச்சினை
நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவியாக நிபியா பணியாற்றினார்.
இந்தநிலையில் நிபியாவுக்கு காதல் உருவானது. தொடர்ந்து காதலனிடம் நிபியா மணிக்கணக்கில் பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனை உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதற்கிடையே அந்த காதலில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நிபியா, தன்னுடைய ஸ்டேட்டசில் தற்கொலை செய்து கொள்ள போவதாக பதிவிட்டு வந்ததாகவும் தெரிகிறது.
காதலனுக்கு வீடியோ கால்...
இந்தநிலையில் நேற்று நிபியா தன்னுடைய வீட்டில் இருந்தபடி காதலனை, வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனை நீ நேரில் பார் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பதறி போன அந்த காதலன், தன்னுடைய நண்பரை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை தெரிவித்து, நிபியாவின் தற்கொலை முடிவை எப்படியாவது தடுத்து நிறுத்து என கூறியதாக தெரிகிறது.
அந்த நண்பர், நிபியாவின் உறவினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொடர்ந்து நிபியாவின் பக்கத்து தெருவில் வசிக்கும் அவருடைய பாட்டிக்கு தகவல் தெரிந்து. உடனே அவர் பதற்றத்துடன் நிபியா வீடு நோக்கி சென்றார்.
தற்கொலை
அங்கு வீடு பூட்டி கிடந்தது. தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்த போது நிபியா தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி, கதறி அழுதார். சிறிது நேரத்தில் அங்கு அக்கம் பக்கத்தினரும் திரண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், காதல் பிரச்சினையில் காதலனுடன் வீடியோ கால் பேசி கொண்டே நிபியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பரபரப்பு
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலன் திடீரென கைவிட்டதால் நிபியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டே மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்