சீசன் முடிந்த பின்னரும் வேட்டங்குடியில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பறவைகள்

சீசன் முடிந்த பின்னரும் வேட்டங்குடி சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் தங்கியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.;

Update: 2021-04-23 19:30 GMT
திருப்பத்தூர்,

 சீசன் முடிந்த பின்னரும் வேட்டங்குடி சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் தங்கியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

பறவைகள் சரணாலயம்

திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாய் சுமார் 100 ஏக்கர் வரை நிலப்பரப்பு கொண்டதாகும்.
ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இங்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் தங்கியிருந்து குஞ்சுபொறித்த பின்னர் திரும்பி செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததன் காரணமாக ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே வெளிநாட்டு பறவைகள் இங்கு வரத்தொடங்கியது.
அதிலும் குறிப்பாக சாம்பல் நிற நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, கரண்டி நத்தை, முக்குளிப்பான் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இலங்கை, தாய்லாந்து, பர்மா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு வந்தன.

விவசாயிகள் மகிழ்ச்சி

 இதையடுத்து இங்கு தங்கியிருந்த இந்த பறவைகள் கண்மாயில் உள்ள கருவேல மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுகளை பொறித்தன.  
தற்போது சீசன் முடிந்த பின்னரும் வெளிநாட்டு பறவைகள் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி செல்லாமல் இங்கேயே தங்கிருந்து சிறகடித்து வருகின்றன. இதனால் வேட்டங்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் இந்த சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வந்து சென்றாலே இந்த பகுதியில் விவசாயம் நன்றாக செழிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
இந்நிலையில் இந்தாண்டு சீசன் காலம் கடந்த நிலையிலும் வெளிநாட்டு பறவைகள் இங்கு தங்கியிருப்பதால் விவசாயம் நன்றாக செழிக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. கண்மாயிலும் தண்ணீர் காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்