காசோலை மோசடி வழக்கில் பேளுக்குறிச்சி ஊராட்சி தி.மு.க. உறுப்பினருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

காசோலை மோசடி வழக்கில் பேளுக்குறிச்சி ஊராட்சி தி.மு.க. உறுப்பினருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை.

Update: 2021-04-23 18:28 GMT
சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன். மிளகு வியாபாரி. இவருடைய மனைவி சுபாஷினி (வயது 35). இவர் பேளுக்குறிச்சி ஊராட்சி தி.மு.க. உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தநிலையில் சுபாஷினி சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா வனவாசி பகுதியை சேர்ந்த தெர்மல் ஒப்பந்ததாரரான ராஜா (40) என்பவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.6 லட்சம் கடன் பெற்றார். அதை சில மாதங்களில் திருப்பி தருவதாகவும் தெரிவித்தார். 
இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அவர் ரூ.6 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார். ஆனால் அந்த காசோலை வங்கியில் செல்லுபடி ஆகாமல் திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா மேட்டூரில் உள்ள முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சுபாஷினி மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் காசோலை மோசடி செய்ததாக தி.மு.க. உறுப்பினர் சுபாஷினிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 6 மாதத்திற்குள் ரூ.6 லட்சத்தை திருப்பி செலுத்தாவிட்டால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.
========

மேலும் செய்திகள்