ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு காரணமாக தனியார் நிறுவனம் மற்றும் 2 வங்கிகள் மூடப்பட்டன.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு காரணமாக தனியார் நிறுவனம் மற்றும் 2 வங்கிகள் மூடப்பட்டன.
கொரோனா தொற்று
பொள்ளாச்சியில் உள்ள நஞ்சப்பா நகர், மகாலிங்கபுரம், கே.ஆர்.ஜி.பி. நகர், பாலகோபாலபுரம் வீதி, ஆர்.கே. நகர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா உறுதியானது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ராசக்காபாளையம், கொல்லப்பட்டி, நரசிங்காபுரம், புரவிபாளையத்தில் 7 வடமாநில தொழிலாளர்கள் சேர்த்து 10 பேர், தெற்கு ஒன்றியத்தில் நஞ்சேகவுண்டன்புதூர், கஞ்சம்பட்டி, அம்பராம்பாளையம், கோமங்கலம்புதூர், சமத்தூர், ஜமீன்ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் 9 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 12 பேருக்கும் கொரோனா உறுதியானது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தனியார் தொழிற்சாலை
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பொள்ளாச்சி நகரில் இதுவரைக்கும் 679 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதில் 524 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 140 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வடக்கு ஒன்றிய பகுதிகளில் கடந்த 2 மாதத்தில் 180 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 144 பேர் குணமடைந்து உள்ளனர்.
புரவிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த தொழிற்சாலையை 14 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
54 பேருக்கு பாதிப்பு
மேலும் வால்பாறையில் ஒருவர், கிணத்துக்கடவில் 12 பேர் என்று பொள்ளாச்சி பகுதியில் மட்டும் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே இங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
செஞ்சேரிமலை, செஞ்சேரி பிரிவில் வங்கிகளில் பணியாற்றும் 2 அதிகாரிகளுக்கு கொரோனா பாதித்ததை தொடர்ந்து அங்கு வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் வனஜா, வட்டார ஆணையாளர் சிவகாமி, வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் ஊழியர்கள் வங்கியில் கிருமி நாசினி தெளித்ததுடன், அங்குள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளனர்.