ஆசிரியரிடம் ரூ.4½ லட்சம் திருடிய 4 பேர் கைது

மன்னார்குடியில், ஆசிரியரிடம் ரூ.4½ லட்சம் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டினர்.

Update: 2021-04-23 17:50 GMT
திருவாரூர்:
மன்னார்குடியில், ஆசிரியரிடம் ரூ.4½ லட்சம் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டினர்.
ஆசிரியர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அரிச்சபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர், நீடாமங்கலம் அருகே உள்ள கற்கோவில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது கண்ணன் மன்னார்குடியில் வாடகை வீட்டில் குடியேறி சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். 
நேற்று முன்தினம் மன்னார்குடி கடைவீதியில் இயங்கி வரும் ஒரு வங்கியில் இருந்து வீட்டுக்கடன் தொகையான ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கண்ணன் வெளியே வந்தார்.
ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் திருட்டு
பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளில் உள்ள ‘டேங்க் கவரில்’ பணத்தை வைத்துள்ளார். அப்போது கண்ணனை நோக்கி வந்த மர்ம நபர்கள், கீழே நூறு ரூபாய் நோட்டு கிடக்கிறது. அது உங்களுடையது என்றால் அதனை எடுத்து கொள்ளுங்கள் என கூறி கண்ணனின் கவனத்தை திசை திருப்பி மோட்டார் சைக்கிள் ‘டேங்க் கவரில்’ இருந்த ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை திருடி சென்றார்.
இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின்படி மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
4 பேர் கைது
மேலும் திருட்டு நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் அடையாளம் கண்டறியப்பட்டு விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பதுங்கியிருந்த ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த பனாலா பரசாந்த்(வயது 22), மேக்கல பிரசன்ன குமார்(25), மேக்கல பிரவீன்குமார்(22), சன்னா உதயகிரண்(19) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். 
பணம் மீட்பு
விசாரணையில, அவர்கள், கண்ணனிடம் இருந்து ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை திருடியது தெரிய வந்தது. 
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை மீட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டது. 
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி மீட்கப்பட்ட பணத்தை ஆசிரியர் கண்ணனிடம் ஒப்படைத்தார். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு 12 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்து பணத்தை மீட்ட தனிப்படையினருக்கு சன்மானம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர். 
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணத்தை மீட்டு கொடுத்த போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்