திருவாரூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 500 குவிண்டால் பச்சைப்பயறு கொள்முதல்
திருவாரூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 500 குவிண்டால் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.36 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தியில் திருவாரூர் மாவட்டம் முதன்மை இடத்தை வகித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றது. தற்போது அறுவடை பணிகள் நிறைவு அடைந்துள்ளது. ஆழ்துளை கிணறு வசதி கொண்ட பகுதிகளில் மட்டுமே தற்போது கோடை நெல் ்சாகுபடி நடைபெறுகிறது. பெரும்பாலான விவசாயிகள் உளுந்து, பயறு வகை பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
உளுந்து- பச்சை பயறு
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 61 ஆயிரத்து 799 எக்டேர் பரப்பில் உளுந்து, பச்சை பயறு சாகுபடி நடைபெற்றுள்ளது. இதில் 41 ஆயிரத்து 190 எக்டேர் பரப்பில் பச்சை பயறு, 20 ஆயிரத்து 609 எக்டேர் பரப்பளவில் உளுந்து சாகுபடி நடைபெற்றுள்ளது.
தற்போது உளுந்து, பச்சை பயறு அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவாரூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சை பயறு கொள்முதல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதில் பச்சை பயறு கிலோ ரூ.71.96-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 500 குவிண்டால் பச்சை பயறு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் ரூ.36 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.