பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் நோய் பரவும் ஆபத்து

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் இருந்து வெளியாகும் கழிவுநீர் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கட்டிட பணிகளுக்குள் புகுந்துள்ளதால் 200 தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாது என்று சென்று விட்டனர்.

Update: 2021-04-23 17:05 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் இருந்து வெளியாகும் கழிவுநீர் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கட்டிட பணிகளுக்குள் புகுந்துள்ளதால் 200 தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாது என்று சென்று விட்டனர்.
பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளில் தனிமைபடுத்திக் கொண்டும் 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 160-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் உருவாகும் கழிவுநீர் பாதாள சாக்கடை குழாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
இந்த கழிவுநீர் கொரோனா வார்டு வாசல் பகுதி மற்றும் அம்மா உணவகம் வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழி வழியாக கடத்தி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த குழாய்களில் கடந்த சில நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆஸ்பத்திரி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கட்டிடங்களை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. 
அச்சம்
கொரோனா வார்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் என்பதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். இந்த அடைப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால் அந்த பகுதி முழுவதும் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. அம்மா உணவகம் வழியாக இந்த கழிவுநீர் ஓடி சுற்றி தேங்கி நிற்பதால் அங்கு உணவு வாங்கி சாப்பிட நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்துள்ள குடும்பத்தினர் தயங்கி வருகின்றனர்.
இதனை வேறு வழியின்றி ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் இரும்பு கம்பியால் குத்தி அடைப்பினை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. மேலும் கழிவுநீர் பொங்கி வழிந்தோடி வருகிறது. 
கழிவுநீர்
இதுகுறித்து அந்த பகுதியில் கட்டிட பணிகளை மேற் கொண்ட ஒருவர் கூறியபோது:- கடந்த பல நாட்களாக இந்த கழிவுநீர் பிரச்சினை உள்ளது. புதிய கட்டிட பகுதிகளுக் குள்ளும் கழிவுநீர் புகுந்துவிட்டது. இதனால் 200 தொழிலா ளர்கள் வேலை பார்க்க முடியாது என்று ஓடிவிட்டனர். கழிவுநீரை மணல்கொண்டு தடுத்து நிறுத்தி வைத்தாலும் வேலை பார்க்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. நோய்தொற்று பரவும் ஆபத்து உள்ளது. நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகிறோம். சாதாரண கழிவுநீர் என்றாலும் பரவாயில்லை. கொரோனா வார்டில் இருந்து வரும் கழிவுநீர் என்பதால் பயமாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார். 
ஒரு புறம் நோய்பரவலை தடுக்க அபராதம், விழிப்புணர்வு என்று முயன்றுகொண்டிருக்கும் வேளையில் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டிய அரசு ஆஸ்பத்திரியிலேயே இதுபோன்ற நிலை உள்ளதை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது வேதனை அளிப்பதாக உள்ளது.

மேலும் செய்திகள்