கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை
கொடைக்கானலில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.;
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது.
அத்துடன் குளுகுளு சீசனும் நிலவி வருகிறது.
ஆனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நகருக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும் கொடைக்கானலில் கடந்த ஒருமாத காலமாக சீரான இடைவெளியுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை கொடைக்கானலில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி உள்ளிட்டவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.