கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் பலி புதிய உச்சமாக 370 பேருக்கு தொற்று

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் இறந்தார். மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 370 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Update: 2021-04-23 16:42 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் இறந்தார். மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 370 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 
முதியவர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 78 வயது முதியவருக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 
இந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்தது. இதையடுத்து முதியவர் வசித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
370 பேர் பாதிப்பு
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 370 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல நேற்று சிகிச்சையில் குணமடைந்து 130 பேர் வீடு திரும்பி உள்ளனர்.  இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 669 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 384 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2 ஆயிரத்து 162 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்