மகளின் திருமணத்துக்காக வந்தவர் கிணற்றில் பிணமாக மிதந்தார் தற்கொலை செய்துகொண்டாரா? போலீஸ் விசாரணை

கச்சிராயப்பாளையம் அருகே மகளின் திருமணத்துக்காக வந்தவர் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-04-23 16:13 GMT

கள்ளக்குறிச்சி

மகளின் திருமணத்துக்காக

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 47). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்பத்துடன் தங்கி இருந்து வந்தார்.
இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி தனது மகள் பிரியதர்ஷினியின் திருமணத்துக்காக ஏழுமலை குடும்பத்துடன் அம்மாபேட்டைக்கு வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற ஏழுமலை மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கிணற்றில் ஆண் பிணம்

இதற்கிடையே அம்மாபேட்டை அருகே கொளஞ்சி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ஆண்பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறந்து கிடந்த ஆண்பிணத்தை மேலே தூக்கி வந்தனர். விசாரணையில் அவர் காணாமல் போன ஏழுமலை என்பது தெரியவந்தது. இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் ஏழுமலை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் திருமணத்துக்காக வந்த தந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அம்மா பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்