உழவர்சந்தை கடைகள் அரசு மைதானத்துக்கு மாற்றம்
வாணியம்பாடி உழவர்சந்தை கடைகள் தற்காலிகமாக இசுலாமியா கல்லூரி அருகே உள்ள அரசு மைதானத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் வாரச்சந்தை காய்கறி கடைகளை உடனடியாக மாற்ற முடியாது என கூறி வியாபாரிகள் கடையடைப்பு செய்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி உழவர்சந்தை கடைகள் தற்காலிகமாக இசுலாமியா கல்லூரி அருகே உள்ள அரசு மைதானத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் வாரச்சந்தை காய்கறி கடைகளை உடனடியாக மாற்ற முடியாது என கூறி வியாபாரிகள் கடையடைப்பு செய்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
வாரச்சந்தை மைதானம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் உழவர் சந்தை மற்றும் 100-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன.
கொரானா இரண்டாம் அலை காரணமாக தொற்று வேகமாக பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாரச் சந்தை மைதானத்தில் செயல்பட்டுவந்த உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடபர்பட்டது.
இந்த நிலையில் தினசரி காய்கறி கடைக்காரர்கள் வேறு இடத்திற்கு நாங்கள் கடைகளை மாற்ற மாட்டோம் எனக்கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணி அளவில் போராட்டக்காரர்களை வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்ரமணி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்,
வியாபாரிகளிடமும், வணிகர் சங்க நிர்வாகிகள் சி.ஸ்ரீதர், மாதேஸ்வரன் உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடத்த்தப்பட்டது.
அதன்படி உழவர் சந்தையை இசுலாமியா கல்லூரி முன்பாக உள்ள அரசு மைதானத்திற்கு நேற்று முதல் இடமாற்றம் செய்தும், தினசரி காய்கறி கடைகள் அதே இடத்தில் அரசின் விதிகளை பின்பற்றி நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவு நள்ளிரவு பிறப்பிக்கப்பட்டதால் நேற்று காலை அதனை பின்பற்றி கடையை நடத்த முடியாது என்று கூறி அனைத்து காய்கறி கடை உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து ஒருநாள் கடைகளை அடைத்தனர்.
நாளை (சனிக்கிழமை) முதல் அரசின் விதிகளை பின்பற்றி காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒட்டுமொத்த கடைகள் திறக்கப்படாததால் காய்கறி வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
மேலும் வாரசந்தை மைதானத்திற்கு வெளியே சாலை ஓரத்தில் காய்கறி மற்றும் பழக்கடைகள் வைக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் சாலை ஓர கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வார சந்தை மைதானத்திற்குள் கடை வைக்க சாலை ஓர நடைபாதை கடை வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி கடைகள் அனைத்தும் மூடி இருந்ததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
தற்போது வாணியம்பாடி உழவர்சந்தை மற்றும் வாரச்சந்தை பகுதி முழுவதுமே தங்கள் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் நினைப்பதால் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையினரும், நகராட்சி நிர்வாகமும் இந்தப் பகுதிகளில் உள்ள வியாபாரிகளின் தலையீட்டிலிருந்து மக்களையும் காப்பாற்றயும், முறையாக அனைத்து நபர்களுக்கும் கடைகள் கிடைக்கவும், சாலையோர நடைபாதை வியாபாரிகள் வாரச்சந்தை பகுதியில் கடை அமைத்து செயல்படவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.