மயிலம் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

மயிலம் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2021-04-23 16:10 GMT
மயிலம், 

கடலூரை சேர்ந்தவர் மாதவன். இவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் பெரும்பாக்கம் கிராமத்தில் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 30-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று 22 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். 250-க்கும் மேற்பட்ட பேரல்களில் தின்னர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் கடலூர் பாலூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவர் தின்னரை பேரல்களில் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது தின்னர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த தின்னர் பேரல்கள் அனைத்திலும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

ஊழியர்கள் ஓட்டம்

மளமளவென பரவிய தீ தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிந்தது. இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் சுரேசுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போராடி தீயை அணைத்தனர்

இதற்கிடையே தகவலறிந்த திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் தீ கட்டுக்குள் வரவில்லை. அதோடு தீயணைப்பு வாகனங்களிலும் தண்ணீர் தீர்ந்து போனது. 

இதையடுத்து மாற்று ஏற்பாடாக டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, தீயணைப்பு வாகனங்களில் நிரப்பினர். பின்னா் சுமார் 2½ மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தொழிற்சாலை முழுவதும் எரிந்து சாம்பலானது. அதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு டேங்கர் லாரியும் தீயில் எரிந்து சேதமானது.

போக்குவரத்து மாற்றம்

தீ விபத்து காரணமாக, அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.  இதனால் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் நேற்று பகல் 12 மணி முதல் 3 மணிவரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. 

விபத்து பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள்

தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த ஒரு டேங்கர் லாரி, தலா 210 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 300 பேரல்களில் இருந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான தின்னர், ரசாயன பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்