493 வீதிகளில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு

493 வீதிகளில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு

Update: 2021-04-23 16:05 GMT
493 வீதிகளில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு
கோவை, ஏப்.24-

கோவையில் ஆரம்பத்தில் கொரோனா பாதித்த வீடுகள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு வந்தன. தற்போது தொற்று அதிகம் உள்ள வீதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது,

கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் வீடுகளில் கொரோனா பாதித்த 662 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் தற்போது நாள்தோறும் சராசரியாக 4,500 பேருக்கு கொரோனா பரிசோதனை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. 

இதன்மூலம் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படுகிறது.

அபராதம்

ஒரு வீதியில் 3 பேருக்கு மேல் பாதிப்பு இருந்தால் அந்த வீதியை தனிமைப்படுத்தி வருகிறோம். கோவை மாநகராட்சியில் மொத்தம் 7,569 வீதிகள் உள்ளன. இதில் 493 வீதிகளில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளது. 

1,604 வீதிகளில் 3 பேருக்கு கீழ் கொரோனா பாதிப்பு உள்ளது.
கோவை மாநகராட்சியில் இதுவரை 52 ஆயிரத்து 258 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 43 ஆயிரத்து 160 பேர் முழுவதும் குணமடைந்து உள்ளனர். 476 பேர் இறந்து உள்ளனர். 

நேற்று மட்டும் விதிமுறை மீறியவர்களுக்கு ரூ.51 ஆயிரத்து 600 அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் வடக்கு மண்டலத்தில்  சக்தி காலனியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது, அந்த பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிந்து, கபசுர குடிநீர் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். 

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்