தொழிலாளி இரும்புக்கம்பியால் அடித்துக்கொலை

திருப்பத்தூர் அருகே மகளை தாக்கிய ஆத்திரத்தில், மருமகனை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-23 16:03 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மகளை தாக்கிய ஆத்திரத்தில், மருமகனை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்

திருப்பத்தூரை அடுத்த கவுண்டனூர் கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 38), கூலித்தொழிலாளி. இவரின் மனைவி மகேஸ்வரி. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்த மகேஸ்வரி அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். 

நேற்று  மாலை சுதாகர் தனது மாமியார் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த மனைவியிடம் பேசி தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர், மனைவியை சரமாரியாகத் தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். 

மாமனார் ஆத்திரம்

இந்தத் தகவலை கேள்விப்பட்ட மகேஸ்வரியின் தந்தை சீனிவாசன் ஆத்திரம் அடைந்து  இரவு சுதாகரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, தூங்கி கொண்டிருந்த சுதாகரை இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கினார். 

அதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். கந்திலி போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மாமனார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். 

பரபரப்பு

மருமகனை மாமனார் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்