கோவில்பட்டியில் 3வது நாளாக லாரிகள் ஓடவில்லை
கோவில்பட்டியில் 3வது நாளாக லாரிகள் ஓடவில்லை.
கோவில்பட்டி
தீப்பெட்டி பண்டல்களுக்கான ஏற்று, இறக்கு கூலியை தீப்பெட்டி உற்பத்தியாளர்களே வழங்க வலியுறுத்தி கடந்த 21ந் தேதி முதல் கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தீப்பெட்டி பண்டல்களை லாரிகளில் ஏற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவில்பட்டி தீப்பெட்டி புக்கிங் டிரான்ஸ்போர்ட் அசோஸியேஷன் தலைவர் மருது செண்பகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஏற்று, இறக்கு கூலியை...
தீப்பெட்டி பண்டல்களுக்கான ஏற்று, இறக்கு கூலியை இதுவரை லாரி உரிமையாளர்கள் தான் செலுத்தி வந்தனர். தற்போது டோல்கேட் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் 30 சதவீத கூலி உயர்வு கேட்கின்றனர். இது எங்களுக்கு கட்டுபடியாகாது. எனவே, இனிமேல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஏற்று, இறக்குக் கூலியை லாரி உரிமையாளர்கள் தருவதில்லை என்றும், பண்டல்களை ஏற்றுபவர்களும், பண்டல்களை வாங்குபவர்களும் தான் ஏற்று, இறக்கு கூலியை வழங்க வேண்டும் வலியுறுத்தி லாரிகளை ஓட்டாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
3வது நாளாக போராட்டம்
கோவில்பட்டியில் 3 வது நாளாக லாரிகள் ஓடவில்லை. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். இது எங்களுக்கு கூடுதல் பலம் தருகிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன், ஆலோசகர் கோவிந்த ராஜன், லாரி புக்கிங் அசோசியேஷன் செயலாளர் கணேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்கள் சங்க தலைவர் பேட்டி
இதுகுறித்து கோவில்பட்டி முச்சந்தி விநாயகர் கோவில் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வேலுச்சாமி கூறியதாவது:- 40 ஆண்டு காலமாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான ஏற்று, இறக்குக் கூலியை லாரி புக்கிங் டிரான்ஸ்போர்ட் தான் எங்களுக்கு கொடுத்து வந்தது. தற்போது புதிய நடைமுறையை கொண்டுவர வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வெளியூர்களில் உள்ள லாரி உரிமையாளர்களிடம் கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறி, லாரிகளை வரவிடாமல் தடுக்கிறார்கள். 3 ஆண்டுகளாக எங்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக 30 சதவீதம் மட்டும் தான் கூலி உயர்வு கேட்கிறோம். லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும், புக்கிங் டிரான்ஸ்போர்ட் அசோஸியேஷனும் இதுகுறித்து எங்களிடம் ஒருமுறை கூட கலந்து ஆலோசிக்கவில்லை. அவர்களாக முடிவு செய்து கொண்டு வேலைநிறுத்தம் என்று அறிவித்துள்ளார்கள். தீப்பெட்டி பண்டல்களை ஏற்றி, இறக்கும் 152 சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். தீப்பெட்டி பண்டல்களை லாரிகளில் ஏற்றாமல் போராட்டம் நடப்பதால் 3 நாட்களாக வேலை இல்லாமல் தவித்து வருகிறோம். 152 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு இதில் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தீப்பெட்டிகள் தேக்கம்
லாரிகள் ஓடாததால், கோவில்பட்டி பகுதியிலுள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீப்பெட்டிகள் தேங்கி உள்ளன. தீப்பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதுடன், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது