கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பரிசோதனை மேற்கொள்ள தயாராக இருப்பவர்களுக்காகவும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்கவும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்தது. பின்னர் பரவல் குறைந்ததால் அதன் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் திறக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த தனி அறை, கழிப்பறை வசதி இருந்தால் சுகாதார துறையினர் ஆய்வு செய்து அனுமதி வழங்கி வருகின்றனர். நீலகிரியில் கொரோனா உறுதியான 85 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
அவர்களது செல்போன் எண், முகவரி போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் உடல்நிலை எவ்வாறு உள்ளது? என்று தினமும் ஊழியர்கள் தொடர்பு கொண்டு கேட்கின்றனர்.
அப்போது குடும்பத்தினர் அல்லது அக்கம்பக்கத்தினர் யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதா?, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்படுகிறதா? என்று விசாரிக்கின்றனர்.
யாராவது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினால், உடனே சுகாதார குழுவினர் நேரில் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், ஏதேனும் சந்தேகம் இருந்தால் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.