சத்திரப்பட்டி அருகே மொபட்டில் சென்ற பெண் கிராம உதவியாளரிடம் நகை பறிப்பு

சத்திரப்பட்டி அருகே மொபட்டில் சென்ற பெண் கிராம உதவியாளரிடம் மர்மநபர்கள் நகையை பறித்து சென்றனர்.;

Update:2021-04-23 20:28 IST
சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசப்பிள்ளைபட்டியை சேர்ந்தவர் கல்பனா (வயது 40). இவர் சத்திரப்பட்டி அருகே உள்ள போடுவார்பட்டி ஊராட்சியில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் அரசப்பிள்ளைபட்டியில் இருந்து போடுவார்பட்டிக்கு மொபட்டில் சென்று வருவது வழக்கம். 
அதன்படி, நேற்று காலை அரசபிள்ளைபட்டியில் இருந்து மொபட்டில் போடுவார்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று தங்களது மோட்டார் சைக்கிளால், கல்பனாவின் மொபட் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய அவர் மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். 
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் கீழே இறங்கி கல்பனாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்தார். பின்னர் 2 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். 
இதுகுறித்து கல்பனா சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்