வேடசந்தூர் கிளைச்சிறையில் கைதிக்கு கொரோனா
வேடசந்தூர் கிளைச்சிறையில் கைதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வேடசந்தூர், ஏப்.24-
ஆத்தூர் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபரை, ஓடையில் மணல் அள்ளியதாக செம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த வாலிபரை திண்டுக்கல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, வேடசந்தூர் கிளை சிறையில் நேற்று முன்தினம் இரவு அடைத்தனர்.
முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் கிளைச்சிறை வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றும் சிறைக்காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.