குங்குமம் வைத்து பூஜை

காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

Update: 2021-04-23 12:26 GMT
காங்கேயம்
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
சிவன்மலை முருகன் கோவில்
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது. நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.
 முருகனே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் சுவாமியிடம் பூக்கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும். அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள பொருள் உத்தரவு பெட்டியில் இருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 
குங்குமம் வைத்து பூஜை
இந்த நிலையில் கோவை மாவட்டம், துடியலூர் பகுதியை சேர்ந்த பவானி என்ற பக்தரின் கனவில் உத்தரவான குங்குமம் நேற்று  முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுவது குறித்து பக்தர்கள் கூறும்போது ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மங்கலகரமான குங்குமம் வைத்து பூஜிக்கப்படுவதால், அனைவரது இல்லங்களிலும் இனி வரும் காலங்களில் மங்கலகரமான நிகழ்வுகள் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது என்றனர்.
இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் மார்ச் மாதம் 25ந் தேதி முதல் ஒரு புகைப்பட தொகுப்பில் அம்மை அப்பர் திருக்கல்யாண கைலாய காட்சி, ஒரு தெய்வ ஜாதகம், ஒரு திருமாங்கல்யம், ரூ.32 மதிப்புள்ள நாணயங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.


மேலும் செய்திகள்