கோவையில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சி

கோவையில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சி

Update: 2021-04-23 11:04 GMT
கோவையில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சி
கோவை


திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விசே‌‌ஷங்களுக்கு வாழை மரம் மற்றும் வாழை இலையின் பங்கு அதிகமாக இருக்கும். முக்கியமாக உணவு பரிமாற வாழையிலை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


 மேலும் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததால் ஓட்டல்களில் வாழை இலையின் பயன்பாடு அதிக அளவு இருந்து வருகிறது.


 இந்த நிலையில்  தற்போது கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகமாகி வருவதால் கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 


அத்துடன் திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. 

இதனால் வாழை இலை வியாபாரம் பாதிக்கப்பட்டு விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


 இதனால் கோவையில் உள்ள பல்வேறு மார்க்கெட்டுகளில் வாழை இலை கட்டுகள் விற்பனையாகாமல் குவிந்து கிடக்கின்றன.
இதுகுறித்து கோவை காந்திபுரம் 8-ம் நெம்பர் மார்க்கெட் வாழை இலை வியாபாரிகள் கூறியதாவது:-

காந்திபுரம் 8-ம் நெம்பர் மார்க்கெட்டில் சித்திரை மாதத்தில் 100 பெரிய இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை வழக்கமாக ரூ.1000, ரூ.1,200 மற்றும் ரூ.1,500 வரை விற்பனையாகும். ஆனால் நேற்று ஒரு கட்டு வாழை இலை ரூ.100, ரூ.200-க்கும் விற்பனை ஆனது.


கொரோனா பரவல் காரணமாக சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளும், கோவில் விழாக்களுக்கு தடையும் விதிக்கப்பட்டதால் வாழை மற்றும் வாழை இலை தேவை குறைந்துவிட்டது. 

மேலும் கோவையில் உள்ள ஓட்டல்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் வாழை இலையின் விலை பெரும் சரிவை சந்தித்து உள்ளது.


காந்திபுரம் 8-ம் நெம்பர் மார்க்கெட்டுக்கு தொண்டாமுத்தூர், நரசீபுரம், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை இலைகள் கொண்டு வரப்படுகிறது.

 ஆனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகளிடம் இருந்து வாங்கி வருவதற்கான போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை. 

விலை சரிவு காரணமாக நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் ஒருசில விவசாயிகள் வாழை இலையை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவை மாவட்டத்தில் வாழை இலை விலை குறைவு காரணமாக வியாபாரிகளும், விவசாயிகளும் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்