மதுரவாயல் பைபாஸ் சாலையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ராட்சத கிரேன்கள் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.
பூந்தமல்லி,
திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் முருகதாஸ் (வயது 47) லாரியை ஓட்டினார். வானகரம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலை மேம்பாலத்தில் ஏறும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இதில் காயம் அடைந்த டிரைவர் முருகதாஸ், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ராட்சத கிரேன்கள் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. கன்டெய்னர் லாரியில் இருந்து ஆயில் அதிக அளவில் சாலையில் கொட்டியதால் அதில் போக்குவரத்து போலீசார் மண்ணை அள்ளி கொட்டினர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.