சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா திருமண மண்டபம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றம்

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா திருமண மண்டபம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது.

Update: 2021-04-22 22:22 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் தினமும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 35 ஆயிரத்து 850 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மீதியுள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், மேட்டூர், ஆத்தூர், எடப்பாடி, ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஷாரோன் மருத்துவமனையின் ஆடிட்டோரியம், கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விடுதி, மணியனூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரி, கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லூரி, பெரியகிருஷ்ணாபுரம் மாணவர் விடுதி, தம்மம்பட்டி அண்ணாதுரை சமுதாய கூடம், மல்லூர் வேதவிகாஸ் பள்ளி ஆகியவை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இதுதவிர, மாவட்டத்தில் 30 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொங்கும் பூங்கா
இந்த நிலையில், சேலம் மாநகராட்சி பகுதியில் கோரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான தொங்கும் பூங்கா திருமண மண்டபமும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 400 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நேற்று கட்டில்கள் கொண்டு வரப்பட்டன. இன்னும் சில நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று சிறப்பு மையமாக திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்