முந்திரி தோப்பு ஏலம் எடுத்தவருக்கு வழங்க மறுப்பு: திருச்சி வனத்தோட்ட கழக அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
முந்திரி தோப்பு ஏலம் எடுத்தவருக்கு வழங்க மறுத்ததால், வனத் தோட்ட கழக அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
முந்திரி தோப்பு ஏலம் எடுத்தவருக்கு வழங்க மறுத்ததால், வனத் தோட்ட கழக அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முந்திரி தோப்பு ஏலம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஆண்டிமடம் சூரக்குழி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 66). இவர், விருத்தாசலம் வனச்சரகத்திற்குட்பட்ட சிலுவைச்சேரி வனப்பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான 25 எக்டேர் பரப்பளவில் உள்ள முந்திரி தோட்டத்தில் 3 மாத காலத்திற்கு முந்திரி பருப்புகளை சேகரம் செய்வதற்கு கடந்த 1994-ம் ஆண்டு ஏலம் எடுத்திருந்தார். அதற்காக டெண்டர் தொகையான ரூ.1 லட்சம் செலுத்தினார். ஆனால், முறைப்படி செல்வராஜிக்கு டெண்டர் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். உரியகாலம் முடிந்தும் பணத்தையும் திருப்பி தரவில்லை.
நஷ்டஈடு கேட்டு வழக்கு
எனவே, நஷ்டஈடு கேட்டு செல்வராஜ், திருச்சி ஸ்ரீரங்கம் முன்சீப் கோர்ட்டில் கடந்த 2004-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு, ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்து 801 வழங்க வேண்டும் என்று திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள வனத்தோட்ட கழக பதிவு அலுவலகத்திற்கு 27.10.2004 அன்று கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், வனத்தோட்ட கழகம் பாதிக்கப்பட்ட செல்வராஜிக்கு வழங்காமல் ஆண்டு கணக்கில் இழுத்தடித்தது. இதனால் ஸ்ரீரங்கம் முன்சீப் கோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி, செல்வராஜ் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.
ஜப்தி செய்ய உத்தரவு
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சிவகாமசுந்தரி, வட்டியுடன் சேர்த்து நஷ்டஈடு தொகை வழங்கா விட்டால் திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள வனத்தோட்ட கழக அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களான கணினி, ஏ.சி.க் கள், மின்விசிறிகள், மின்விளக்குகள், மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை வருகிற 30-ந்தேதிக்குள் ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அமினாவுடன் வந்து ஜப்தி முயற்சி
இந்த நிலையில் நேற்று காலை கம்பரசம்பேட்டையில் உள்ள வனத்தோட்ட கழக அலுவலகத்திற்கு, பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு அமினாவுடன் செல்வராஜ் சென்றார்.
அப்போது அங்கு நிர்வாக இயக்குனர் இல்லை. அவர் வந்தவுடன் ஜப்தி செய்து கொள்ளுங்கள் என அலுவலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார். அதை ஏற்று ஜப்தி முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றனர்.