நெல்லையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா பரவல் அதிகரித்ததையொட்டி நெல்லையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2021-04-22 21:34 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாவட்டத்தில் ஒரே நாளில் 500 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் நெல்லை மாநகரில் மட்டும் 300 பேர் வரை தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் ஆகியோர் உத்தரவுப்படி மாநகர நல அலுவலர் சரோஜா தலைமையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சீல் வைத்து, தெருக்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க தெருக்களை மூடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளித்து பிளீச்சிங் பவுடரும் தூவி வருகின்றனர்.

இருந்தபோதிலும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராமல் பரவல் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதையடுத்து அதிகளவு கிருமி நாசினியை தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நெல்லை மாநகராட்சி, தீயணைப்புத்துறையினருடன் இணைந்து கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி பாளையங்கோட்டை தெற்கு பஜார் மற்றும் குறுக்கு சந்து பகுதிகளில் நேற்று தீயணைப்பு வாகனத்தில் கிருமி நாசினியை நிரப்பி தெளித்தனர். இந்த பணியை மாநகர நல அலுவலர் சரோஜா, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். கொரோனா அதிகமாக பரவி வரும் பகுதிகளில் இதுபோன்று கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு கொரோனா அதிகமாக பரவியபோது, வீதிகளில் எங்கும் கிருமிநாசினி அதிகளவில் தெளிக்கும் வகையிலான டிராக்டர்கள், பெரிய வாகனங்கள் நெல்லை மாநகராட்சிக்கு தயார் செய்து வழங்கப்பட்டன. இந்த ஆண்டும் கொரோனா அதிகமாக பரவி வருவதால் அதுபோன்ற வாகனங்களை கிருமிநாசினி தெளிக்கும் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்