2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா: ஈரோடு மாநகராட்சி மருத்துவமனை மூடல்

2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை மூடப்பட்டது.

Update: 2021-04-22 21:31 GMT
ஈரோடு
2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை மூடப்பட்டது.
2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா
ஈரோடு காந்திஜி ரோட்டில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த மருத்துவமனையில் கொரோனா பரிசோதனையும், மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வந்தது. இதனால், இந்த மருத்துவமனைக்கு ஈரோடு மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினசரி வந்து சென்றனர்.
மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 2 கர்ப்பிணிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கர்ப்பிணிகள் 2 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனை மூடல்
மேலும் மருத்துவமனையில் இருந்த பிற கர்ப்பிணிகள், நோயாளிகள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மருத்துவமனையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. இதேபோல், மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி மையம், கொரோனா பரிசோதனை மையமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனை மீண்டும் நாளை காலை (சனிக்கிழமை) முதல் திறக்கப்படும் என்றும், அன்றைய தினம் கொரோனா பரிசோதனை, கொரோனா தடுப்பூசி மையமும் செயல்படும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்