நெல்லையில் பெய்த மழையால் சேறும் சகதியுமாக மாறிய தற்காலிக பஸ் நிலையம்
நெல்லையில் பெய்த பலத்த மழையால் தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியுமாக மாறியது.
நெல்லை:
நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில், கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி அருகில் பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரே காலி இடங்களில் 2 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து டவுன் பஸ்கள், வெளியூர் பஸ்கள் மற்றும் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லையில் மாலை நேரத்தில் லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் தற்காலிக பஸ் நிலையங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பஸ் நிலைய வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
பஸ் ஏற வரும் பயணிகள் சகதி மற்றும் மழைநீரில் நடந்து சென்று பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மழைநீர் தேங்காத வகையில் பஸ் நிலைய வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.