ஈரோடு மாவட்டத்தில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பல்
ஈரோடு மாவட்டத்தில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி ெபாது மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
முகநூலில் போலிகணக்கு
தற்போதைய விஞ்ஞான உலகத்தில் செல்போன் இல்லாத நபர்களே கிடையாது. மேலும் செல்போன் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருளாகவும் உள்ளது. செல்போனில் முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை (ஆப்) பொதுமக்கள் பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் எந்த அளவுக்கு நன்மை உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளது. சிலர் இதை நல்லதுக்கு பயன்படுத்துகிறார்கள். சிலர் இதுபோன்ற செயலிகளை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.
குறுஞ்செய்தி
இந்த நிலையில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் ஒரு கும்பல் பொதுமக்களிடம் இருந்து பணம் பறித்து வருகிறது. இதுபோன்ற புகார்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தினமும் குறைந்தது 4 முதல் 5 வரை வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதாவது ஒருவருடைய முகநூலை மர்ம நபர்கள் திருடி அவருடைய படத்தையே பதிவிறக்கம் செய்து அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்கின்றனர். பின்னர் மர்ம நபர்கள் அவருடைய முகநூலில் உள்ள நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.
விழிப்புணர்வு
அதில் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும், உடனடியாக பணம் அனுப்பி வைக்குமாறும் கூறுகின்றனர். இதை நம்பி ஒரு சிலர் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் அனுப்பி விடுகின்றனர். ஆனால் ஒரு சிலர் நண்பருக்கு என்னாச்சு என்பதை தெரிந்து கொள்வதற்காக செல்போனில் தொடர்பு கொண்டு விசாரிக்கின்றனர்.
அப்போதுதான் மர்ம நபர்கள் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பணம் பறிப்பது தெரிய வருகிறது. இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளை கண்டுபிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.