நின்று கொண்டிருந்த லாரியில் ஸ்கூட்டர் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலி
பூதலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரியில் ஸ்கூட்டர் மோதியதில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி;
பூதலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரியில் ஸ்கூட்டர் மோதியதில்
பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ஸ்கூட்டரில் சென்றனர்
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கோட்டரப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியராஜ்(வயது 55). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜெயந்தி(40). நேற்று இரவு கலியராஜும், ஜெயந்தியும் ஸ்கூட்டரில் பூதலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அய்யனாபுரம் ரயில்வே கேட்டை கடந்து பூதலூர் நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது.
அந்த லாரியின் பின்புறத்தில் திடீரென கலியராஜ் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியது.
பலி
இதில் கலியராஜும், ஜெயந்தியும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த லாரி, கல்லணை கால்வாயில் நடைபெறும் பணிக்கு வந்த லாரி என்றும், இருள் சூழ்ந்த பகுதியில் லாரி நின்றதால் லாரி நின்று கொண்டு இருந்தது தெரியாமல் ஸ்கூட்டரில் வந்தவர்கள் லாரியில் மோதி விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தி் பலியான கலியராஜ், ஜெயந்தி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.