தம்பிக்கு பதில் அண்ணனை வெட்டிக்கான்ற கும்பல்

மனைவியிடம் தவறாக பேசியது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த பைனான்சியர் தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் அவரை தேடிச்சென்றார். அவர் கிடைக்காததால் அவருக்கு பதில் அவரது அண்ணனை வெட்டிக்கொன்றார். தலைமறைவான அந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-04-22 20:48 GMT
சேதுபாவாசத்திரம்;
மனைவியிடம் தவறாக பேசியது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த பைனான்சியர் தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் அவரை தேடிச்சென்றார். அவர் கிடைக்காததால் அவருக்கு  பதில் அவரது அண்ணனை வெட்டிக்கொன்றார். தலைமறைவான அந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஸ்டூடியோ உரிமையாளர்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வீடு புகுந்து ஸ்டூடியோ உரிமையாளர் வெட்டிக்கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதுகுறித்த விவரம் வருமாறு:-
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அழகியநாயகி புரத்தை சேர்ந்தவர் அன்புரோஸ். இவருக்கு லீலாஜோஸ்பின் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். 
அன்புரோசின் தம்பி சகாயராஜ். இவரது மனைவி பிரியா. அண்ணன்-தம்பி இருவரும் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். அன்புரோஸ் பட்டுக்கோட்டையில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். சகாயராஜ், மல்லிப்பட்டினத்தில் வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார்.
பெண்ணிடம் தவறாக பேசி உள்ளார்  
இந்த நிலையில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் தில்லங்காட்டை சேர்ந்த லட்சுமணன், பைனான்ஸ் தொழில் சம்பந்தமாக சகாயராஜ் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். 
அப்போது லட்சுமணன், பிரியாவிடம் தவறாக பேசியதுடன் அவருடைய செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். 
போலீஸ் நிலையத்தில் புகார்
இதனால் ஆத்திரம் அடைந்த சகாயராஜ் தனது மனைவி பிரியாவுடன் நேற்று முன்தினம் இரவு சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றார். அங்கு புகார் அளித்து விட்டு இரவு 10 மணி அளவில் இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். 
தன் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததை தெரிந்து கொண்ட லட்சுமணன் நான்குக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் சகாயராஜை தேடிச்சென்றார். அவர்கள் அனைவரும் கும்பலாகச் சென்று சகாயராஜை வழிமறித்து தாக்க முயன்று உள்ளனர். 
அண்ணனை சரமாரியாக வெட்டினர்
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த சகாயராஜ் அந்த கும்பலிடம் சிக்காமல் தனது மனைவியுடன் வேறு வழியாக தப்பித்து சென்றார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் தலைமையிலான கும்பல் சகாயராஜ் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என்று கருதி அவரை தேடி அவரது வீட்டிற்குச் சென்றனர். 
அப்போது வீட்டில் இருந்த சகாயராஜின் அண்ணன் அன்புரோஸ், இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து ஏன் அடாவடித்தனம் செய்கிறீர்கள்? எனக் கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் தலைமையிலான கும்பல் அன்புரோசை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 
பரிதாப சாவு
இதில் அன்புரோஸ் பலத்த வெட்டு்க்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்தது. 
வலைவீச்சு
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புரோசை கொலை செய்துவிட்டு தலைமறைவான லட்சுமணன் தலைமையிலான 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். தம்பியை தேடிச்சென்ற கும்பல் அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் சேதுபாவாசத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்