மே மாதம் 5-ந் தேதி வரை கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறுத்தம்; ஆர்.டி.ஓ. சைபுதீன் தகவல்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி வருகிற மே மாதம் 5-ந் தேதி வரை நிறுத்தம் செய்யப்படுவதாக ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் தெரிவித்தார்.
ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி வருகிற மே மாதம் 5-ந் தேதி வரை நிறுத்தம் செய்யப்படுவதாக ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் தெரிவித்தார்.
கைவிட வேண்டும்
சென்னிமலை அருகே நேற்று முன்தினம் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர். இதை அறிந்த விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் நல்லசாமி கூறும்போது, ‘வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், வாய்க்காலை ஒட்டிய நிலத்தடி நீராதாரம், கிணறு, ஆழ்துளை கிணறு வறண்டு போகும். மரம், செடிகள் வெட்டப்படும். கால்நடைகளும் மடியும். இந்த திட்டத்தை ஏற்கனவே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கைவிட்டார். அதுபோல தற்போதும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்’
பாலைவனம்
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு பேசும்போது, ‘தற்போதைய அரசால் ஏற்கனவே கைவிடப்பட்ட திட்டம் என்பதால் வருகிற மே மாதம் 2-ந்தேதிக்கு பின்னர் அமையும் புதிய அரசிடம் நாங்கள் முறையிட்டு திட்டத்தை நிறுத்துவோம். அதுவரை கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கூடாது.
கீழ்பவானி வாய்க்காலே கசிவு நீர் திட்டம் ஆகும். சீரமைப்பு என்ற பெயரில் கான்கிரீட் தளம், சிலாப் அமைத்தால் விளைநிலங்கள் பாலைவனமாகும்' என்று கூறினார்.
விவசாயம் அழியும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி பேசும்போது, ‘கான்கிரீட் தளம் அமைத்தால் 2 ஆயிரத்து 300 கனஅடியில் இருந்து 1,800 கனஅடியாக நீர் குறைக்கப்படும். கீழ்பவானியில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 24 டி.எம்.சி. நீர் 19.6 டி.எம்.சி. ஆனது.
கான்கிரீட் தளம் அமைந்து வாய்க்கால் குறுகும்போது மேலும் நீர் வரத்து குறைந்து விவசாயம் அழியும். எனவே தற்போது சீரமைப்பு திட்டம் எனக்கூறி கமிஷன் திட்டத்தை செயல்படுத்த முயலக்கூடாது' என்றார்.
பணிகள் நிறுத்தம்
இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. சைபுதீன் கூறியதாவது:-
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற மே மாதம் 5-ந்தேதி வரை இந்ததிட்டம் தொடர்பாக வாய்க்கால் உள்ள பகுதி, அதனை ஒட்டிய இடங்களில் எந்த பணிகளும் நடக்காது. பொதுப்பணித்துறையினர் வாய்க்காலுக்குள் வரமாட்டார்கள். கீழ்பவானியில் வருகிற 30-ந் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டு, அடுத்து வர உள்ள அரசு பரிந்துரைப்படி பணியை செயல்படுத்த உத்தரவிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.