பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் திடீர் மோதல்; வாலிபர் சாவு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் திடீரென்று மோதிக் ெகாண்டனர். இதில் வாலிபர் உயிரிழந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தைச் சேர்ந்தவர் பாபநாசம். இவருடைய மகன் முத்து மனோ (வயது 27). இவர் மீது மூன்றடைப்பு, களக்காடு ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு களக்காடு போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக முத்து மனோ கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் முத்து மனோவை ஸ்ரீவைகுண்டம் சிறையில் இருந்து பாளையங்கோட்டை சிறைக்கு நேற்று சிறைத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் வைத்து முத்துமனோவுக்கும், சில கைதிகளுக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அங்கு இருந்த போலீசார், கைதிகளை அவரவர் அறைகளில் அடைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த முத்து மனோவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவில் முத்து மனோ பரிதாபமாக இறந்தார்/
இதற்கிடையே, முத்து மனோவின் ஆதரவாளர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதிகள் மோதிக் கொண்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மோதிக் கொண்ட சம்பவத்தில் வாலிபர் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.